அமைதியை நிலைநாட்டுவதற்குத் திணறும் மோடி அரசு; மணிப்பூரில் ராகுல் காந்தி! - தற்போதைய சூழல் என்ன?
இரண்டு மாதங்களாக வன்முறைக் காடாக மாறியிருக்கும் மணிப்பூரில் பா.ஜ.க அரசால் அமைதியைக் கொண்டுவர முடியாத சூழலில், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க ராகுல் காந்தி மணிப்பூருக்குச் சென்றிருக்கிறார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிடுவதுபோல, அங்கு ‘டபுள் இன்ஜின் சர்க்கார்’ நடைபெறுகிறது. ஆனாலும், மே 3-ம் தேதி அங்கு வெடித்த இனக்கலவரம் இன்றுவரை முடிவுக்கு வந்தபாடில்லை. வன்முறை தொடங்கிய பிறகு, மூன்று வாரங்கள் கழித்து மணிப்பூருக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைதியை மீட்டெடுப்பதற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதனால் எந்தப் பலனும் ஏற்படாத நிலையில், இன்னும் அங்கு பதற்ற நிலை தொடர்கிறது.

இத்தகைய சூழலில்தான், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக மணிப்பூருக்குச் சென்றிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இரண்டு நாள்கள் பயணமாக மணிப்பூருக்குச் சென்றிருக்கும் ராகுல் காந்தி, இன்று விமானம் மூலம் இம்பாலுக்குச் சென்றார். அவரை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மணிப்பூர் முன்னாள் முதல்வருமான இபோபி சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
மைதேயி, குக்கி பழங்குடியினருக்கிடையிலான வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைச் சந்திப்பதற்காக, இம்பாலிலிருந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி சென்றார்.

ராகுல் காந்தியைக் காண்பதற்காக, சாலையின் இருபுறமும் மக்கள் கூடியிருந்தனர். பிஷ்ணுபூர் அருகே ராகுல் காந்தி சென்றுகொண்டிருந்தபோது, அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதனால், மக்களைச் சந்திக்க முடியாமல் இம்பாலுக்குத் திரும்பினார் ராகுல் காந்தி.
பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் சாம்பித் பாத்ரா, ‘ஹெலிகாப்டரில் செல்லுமாறு ராகுல் காந்தி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், அவர் சாலை வழியாகச் சென்றார். அதனால், குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டன’ என்று கூறியிருக்கிறார்.
ராகுல் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து மணிப்பூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியிருக்கிறார்கள்.

ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘பிரதமர் மோடி மௌனமாக இருக்கலாம் அல்லது செயல்படாமல் இருக்கலாம். ஆனால், மணிப்பூரில் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளைக் காதுகொடுத்துக் கேட்கவும், அவர்களின் காயங்களுக்கு மருந்து போடவும் முயலும் ராகுல் காந்தியை ஏன் தடுக்க வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவந்தாலும், இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்துவரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியாளர்களால் அமைதியைக் கொண்டுவர முடியவில்லை. மே 3-ம் தேதி வன்முறை வெடித்ததிலிருந்து, மணிப்பூர் வன்முறை பற்றி ஒரு வார்த்தையைக்கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, ஜூன் 20-ம் தேதி அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசுவதற்காக முன்னாள் முதல்வர் இபோபி சிங் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமரிடம் நேரம் கேட்டிருந்தனர். அவர்களைச் சந்திக்காமலேயே மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஆனாலும், இன்றுவரை மணிப்பூரில் பதற்றம் நீடித்துவருகிறது.
வன்முறையால் பற்றியெரிந்துகொண்டிருக்கும் ஒரு மாநிலத்துக்கு ஒரே ஒரு முறை மட்டுமே உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்று வந்தார். அந்த ஒரு முறைகூட பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. ஆனால், ராகுல் காந்தி அங்கு சென்றிருக்கிறார். ராகுலின் பயணத்தை பா.ஜ.க-வினர் விரும்பவில்லை. ஆகவேதான், ‘ராகுல் காந்தி ஒன்றும் அமைதித் தூதர் அல்ல. அவர் ஓர் அரசியல் சந்தர்ப்பவாதி’ என்று பா.ஜ.க-வின் அமித் மாளவியா விமர்சித்திருக்கிறார். ராகுல் காந்தியை விமர்சிக்கும் பா.ஜ.க-வினரிடம், பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களை பிரதமர் மோடி இன்னும் ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதிலே இல்லை.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “மணிப்பூரில் பா.ஜ.க ஆட்சிதான் நடைபெறுகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் இதுவரை செல்லவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ராகுல் காந்தி தடுக்கப்பட்டதற்கு அமைச்சர் உதயநிதியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தி, அமைதியைக் கொண்டுவர பா.ஜ.க அரசால் முடியவில்லை. அந்த அளவுக்கு அங்கு நிலைமை கைமீறிப்போய்விட்டது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் சுமார் 50,000 மக்களால் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாத சூழல் நிலவுகிறது.














எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.