Published:Updated:

வாழ்க்கைதான் நிரந்தரம்... வாழ்பவர்கள்? | செட்டிநாடு| கிராமத்தானின் பயணம் - 20

வரக்கால்பட்டில் வளரும்போது நான் மிகவும் ரசித்த விஷயம், திண்ணையில் உட்கார்ந்து தெருவில் போகும் மக்களை பார்ப்பது. அதுவும் உலகமே வேலையில் ஈடுபடுகையில் நான் மட்டும் விடுமுறையில் இருந்தால்? காலையில் கையில் தந்தி பேப்பரை வைத்துக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்ப்பதில் என்ன ஒரு சந்தோஷம்!

(இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள ’drop down’ மூலம் பாகம் 1-19 படிக்காதவர்கள் படிக்கலாம்)

2019 ஏப்ரல் மாதம் பாண்டியில் இருந்தேன். உங்களுக்கே தெரியும் ஏப்ரல் வெய்யில் நம்மூரில் எப்படி என்று. இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாது, ’கானாடுகாத்தான்’ செல்லலாம் என்று என் வழக்கமான ஓட்டுநர் அய்யப்பனை கேட்டேன். அவரும் வேறு ஏதும் பயணங்கள் ஏற்றுக்கொள்ளாததால் சரி என்று சொல்ல, அதிகாலை எழுந்து 6:30 மணிபோல் கிளம்பினோம். 280 கிமீ. கிட்டத்தட்ட 5 மணிநேரம். வழியில் பெரம்பலூரில் ஆசுவாசப்படுத்திக்கொண்டு ’அஸ்வின்’ என்ற உணவகத்தில் சிற்றுண்டி உண்டு, செட்டிநாடு என்ற இலக்கை அடையும்போது நன்பகல் 12 மணிக்கு மேல்.

தங்கிய விடுதி ஒரு செட்டி நாட்டவரின் இல்லம். இரண்டு மாடிகள். 20 அறைகளுக்கு குறையாமல். மிகப்பெரிய திறந்த வாசல். அதைவிட பெரிய வரவேற்பறை. நூறு பேர் தாராளமாக அமரலாம். உள்ளே சென்று சம்பிரதாயங்கள் முடித்து வர, அந்த விடுதியின் உரிமையாளரின் பேத்தி, எங்களுக்குச் சுற்றி காட்டினார். கூடவே, அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சற்று கூறினார். அதற்கு முன்பே சில நண்பர்கள் எனக்கு ஓரளவுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணியிருந்தார்கள்.

கோட்டை விடுதி. செட்டிநாடு
கோட்டை விடுதி. செட்டிநாடு

மகத்தான நகரத்தார் சமூகத்தைப்பற்றி அவ்வளவு சுருக்கமாக எழுத முடியாது. இருந்தாலும் முயற்சிக்கிறேன். நாட்டுக்கோட்டை நகரத்தார் (நாட்டு - டவுன் (Town), கோட்டை - பெரிய இல்லம் (Mansion), நகரத்தார் - டவுன் மக்கள் (City Dwellers)) என்று பொதுவாக அறியப்படும் இந்த சமூகம், ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து காவேரிபூம்பட்டினம் இடம் பெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து சில காரணங்களால் இடம் பெயர்ந்து தற்போதுள்ள காரைக்குடியில் 700 ஆண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்ததாக சொல்லப்படுகிறது. அவ்வாறு குடியமர்ந்த நிலப்பரப்பு செட்டிநாடு என்று அறியப்படுகிறது.

இந்த சமூகமே பல நூற்றாண்டுகள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும், 1800-களில் இவர்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் குறிப்பாக பர்மா (இன்றைய மியான்மர்) போன்ற நாடுகளில் குடியேறி வணிகத்தை பரப்பி, கொடிகட்டி பறந்தார்கள். அவ்வாறு ஈட்டிய செல்வத்தில் மீண்டும் வணிகத்தில் முதலீடு செய்தது போக, செட்டிநாட்டில் பெரிய மாளிகை போன்ற வீடுகளை எழுப்பிச் செழித்தார்கள். அந்த வீடுகளில் சில இன்றும் கம்பீரமாக நிற்கின்றன. பல கவனிப்பின்றி சற்றே ஒளியிழந்து காணப்படுகின்றன. இருதரப்பட்ட மாளிகைகளையும் சுற்றிப் பார்த்தோம்.

இன்றைய நிலையில் அவ்வாறு வீடு கட்டுவதற்கு யாராவது முன்வருவார்களா என்பது சந்தேகமே. முதலில் கவனத்துக்கு வருவது வீட்டின் தளத்தின் உயரம். குறைந்தது 6-7 படிகள் ஏறித்தான் வீட்டின் தரைத்தளத்தை அடையவேண்டும். இதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது இவர்கள் காவேரிபூம்பட்டினத்தில் வாழ்ந்த காலத்தில் ஆழிப் பேரலை (சுனாமி - Tsunami) மொத்த நகரத்தையே புரட்டிப்போட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக, அவர்கள் இடம் பெயர்ந்து மாளிகைகளை எழுப்பியபோது சற்றே உயர்த்தியே எழுப்பினார்களாம். நல்ல காரணம்தான்.

அவ்வளவு அறைகள், பெரிய வாசல்கள், பொது இடங்கள் எல்லாம் எதற்கு என்றால், அதற்கும் நல்ல காரணம் உண்டு. நகரத்தார்கள், எப்போதும் அவர்களுடைய கலாசாரத்துக்கும் பழக்கவழக்கங்களுக்கும் மிக முக்கியத்துவம் தருபவர்கள். திருமணம் மற்றும் சுப காரியங்களை முடிந்தவரை சொந்த ஊரிலேயே நடத்துவார்கள். மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்களும் வருடம் ஒரு முறையேனும் சந்திப்பதை எதிர்பார்த்தே பெரிய மாளிகைகளையும் அவற்றில் ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒவ்வொரு பகுதியையும் கட்டியுள்ளார்கள்.

என் அண்ணனின் நண்பர் சுற்றிக்காட்டிய அவரின் பூர்வீக வீட்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனி பூஜை அறையே இருந்தது. பெரிய வீடு. நிறைய அறைகள். வாழ்வது என்னவோ நொடித்துப்போன ஒரே குடும்பம். பராமரிக்கவே சம்பாரிக்கவேண்டும். அவ்வளவு பெரிய சொத்து.

நகரத்தார்களின் கலாசாரத்தில் இன்னொரு தனித்துவமான சமாச்சாரம், திருமணம். என் நண்பர் சொன்னதின் சாராம்சம் இதுதான். நகரத்தார்கள் பொதுவாக ஒன்பது கோவில்களுக்குள் (நகர கோவில்) அடங்குவார்கள். இந்த ஒன்பது கோவில்கள், ஒன்பது ஊர்களில் உள்ளன, பிள்ளையார்பட்டி, சூரக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், இரணியூர் உட்பட. பொதுவாக, மாப்பிள்ளையும் பெண்ணும் வெவ்வேறு கோவில்களை சேர்ந்தவராக இருப்பார்கள். மாப்பிள்ளையின் கோவிலில் தகவல் சரிபார்த்து ஒப்புதல் வழங்கி, அவர்கள் அளிக்கும் மாலைதான் திருமணத்தின் தொடக்கம். அதற்கப்புறம், 2-3 மூன்று நாட்கள் திருமண வைபவங்கள் மற்றும் சார்ந்த சடங்குகள் நடக்கும். ஒவ்வொரு திருமணமும் அந்த கோவில்களில் பதிவு செய்யப்படவேண்டும். ’சரிப்பா, இந்தக் காலத்திலுமா அப்படி?’ என்றால், என் நகரத்தார் நண்பர்கள் ’ஆமாம்’ என்கிறார்கள்.

கடந்த 50-75 ஆண்டுகளில் இவர்களின் கலாசாரம் சற்றே மாறி வருகிறதாம். அவரவர் வேலை மற்றும் தொழில் நிமித்தம் வெவ்வேறு நாடுகளிலும் இருப்பதால், சொந்த ஊருக்குச் செல்வது வெகுவாகக் குறைந்துள்ளதாம். மேலும், சில நகரத்தார் திருமண விஷயங்களிலும் அங்கே இங்கே சற்று மாறி திருமணம் செய்வதாலும், சில கலாசார மாற்றங்கள் நிகழ்வது தவிர்க்கமுடையததாகி விட்டதாக சொல்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

’’எல்லாமே கணினிமயம் ஆனாலும், அந்த தாள்களை தொட்டு முதலீட்டை நிர்வகிப்பது தனி சுகம்தான்’’ என்று சொன்னார். நான் மறுக்கவில்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.

என்ன ஒரு வரலாறு... என்ன ஒரு கலாசாரம்... மலைப்பாக இருக்கிறது!

நான் தங்கியிருந்த விடுதி ஒரு மாளிகைதான். அதன் தற்போதைய உரிமையாளர் 80 வயதான இளைஞர். என்னிடம் பேச ஆரம்பிக்க நான் அவரிடம் என்னைப்பற்றி சொல்ல, வெகு சீக்கிரத்தில் எங்களுக்கு இடையேயான பொது விஷயம் தெரியவந்தது. அது பயண மோகம் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்வது. அவர் சென்று வந்த நாடுகள், எந்த நிறுவனத்தில் என்ன பங்கு என நிறைய நேரம் பேசினார். அவருடைய கோப்புகளை தருவித்து காண்பித்தார். எல்லாமே கணினிமயம் ஆனாலும், அந்த தாள்களை தொட்டு முதலீட்டை நிர்வகிப்பது தனி சுகம்தான் என்று சொன்னார். நான் மறுக்கவில்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. நான் 99% கணினியை நம்பும் ஆள். இருந்தாலும் பெரியவர் இவ்வளவு ஈடுபாட்டுடன் பேசும்போது அவரை ஏமாற்றம் அடையச்செய்வதில் பயன் ஒன்றும் இல்லை. நன்கு பேசினார்.

நகரத்தார் பற்றி சொல்லும்போது அவர்கள் உணவைப்பற்றி சொல்லாமல் எப்படி. ’செட்டிநாட்டு’ சமையல் நம் நாடே அறிந்தது. அவர்களின் செட்டிநாடு சிக்கன், காரைக்குடி இறா வறுவல், குழிப்பணியாரம், வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், கவுனி அரிசி பாயாசம் என அடுக்கலாம்.

அந்த விடுதியிலேயே நல்ல உணவு பரிமாறினார்கள். மனைவி சைவம். ஆகவே மீன், இறைச்சி எல்லாம் என் இலைக்கே. உணவை வீணடிப்பது எனக்கு பிடிக்காது. அவ்வளவு ருசி வேறு. அதற்கும் மேல் அவர்களின் உபசரிப்பு. உரிமையாளர் முதல் பரிமாறுபவர் வரை புன்முறுவலோடு நம்மை வற்புறுத்தி பரிமாறினார்கள். நமக்குத்தானே தெரியும் அதெல்லாம் நமக்கு தேவையில்லை, அப்படியே நன்கு சாப்பிடுவோம் என்று. இருந்தாலும் கொஞ்சம் பிகு பண்ணி ஏதோ அவர்களால் தான் நிறைய சாப்பிடுவது போல ஒரு நாடகம் போட்டோம். நம்பினார்களா தெரியவில்லை. நமக்கு வயிறும், வாயும், மனதும் நிறைந்தது.

இப்படிச் சாப்பிட்டுவிட்டு சும்மா இருந்தால் உடம்பு கெட்டுவிடும். ஆகவே, அந்த தெருக்களில் நடந்து சென்றோம். உண்மையில் ஒரு காக்கா இல்லை. அவ்வளவு அமைதி. நிறைய வீடுகள் களையிழந்து. சில பூட்டியும். மக்கள் எல்லோரும் பெரிய நகரங்களில் வசிப்பதால், கிராமத்தில் (கானாடுகாத்தான்) மக்கள் மிகக் குறைவே. அந்த பெரிய மாளிகைகளை பராமரிக்கும் சிப்பந்திகள் மட்டும் அங்கே இங்கே தென்பட்டார்கள்.

அதை முடித்து, பக்கத்திலியே ஆத்தங்குடி தள ஓடுகள் (டைல்ஸ் - Tiles) செய்யும் இடத்துக்கு சென்று பார்த்தோம். மிக சுலபமாக செய்வது போல் தோன்றினாலும், அந்த ஓடுகள் கடின உழைப்பின் பலன். செய்பவர்கள் மட்டும், அந்த ஓடுகள் போல கீழ்நிலையில் மட்டுமே இருப்பது நியதி போலும். அதேபோலத்தான் அந்த கண்டாங்கி சேலை நெய்யும் நெசவாளிகள். என்னால் பார்த்து சில நிமிடங்கள் யோசிக்கத்தோணும். அது மட்டுமே முடிந்தது. இந்த மாதிரி எவ்வளவோ ஏற்றத்தாழ்வுகள், எல்லா இடத்திலும். தீர்வு என்ன என்று சொல்ல யாருக்குமே முடியாது. நியதி இதுதான் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? மனசு சில சமயங்களில் மறுக்கிறது. சரி இதெல்லாம் அதிகமாக நினைத்தால் குழப்பம்தான் பதில். ஆகவே ஆண்டவனிடம் சென்று "பிள்ளையாரப்பா எல்லோருக்கும் நல்ல நிம்மதியை கொடுப்பா" என்று ’பிள்ளையார்பட்டி’ ஆண்டவனை தரிசித்து வேண்டினோம். இந்த பிள்ளையார்பட்டி கோவில், நகரத்தார்களுக்கு மிக முக்கியமான கோவில்.

எல்லாம் மிகவும் நிதானமாக முடிக்க மூன்று நாள் ஆக, கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. வழியில் அழகப்பா பல்கலைக்கழகம் வழியாக வந்தோம். அந்த தனி மனிதரின் தொலைநோக்கு, தாராள கொடை குணம், கல்விக்கு தந்த முக்கியத்துவம் எல்லாம் சேர்ந்து இன்று ஒரு பெரிய ஆலமரமாக பரந்து விரிந்து உள்ளது. பிரமிக்க வைத்தது. அந்தப்பக்கம் சென்றால், தவறாமல் பாருங்கள்.

மூன்று நாட்கள், நிறைய விஷயங்கள் அறிந்துகொண்டோம். அனுபவித்தோம். அந்த மாளிகையினில் ஒன்று சற்றே இடிந்து வரக்கால்பட்டில் இருக்கும் என் பெரிய தாத்தாவின் (அவர் இல்லை) மாளிகை வீட்டை (இன்னும் இருக்கிறது) நினைவூட்டியது.

பழைய கோட்டை / மெத்தை தாத்தா வீடு
பழைய கோட்டை / மெத்தை தாத்தா வீடு

வரக்கால்பட்டில் வளரும்போது நான் மிகவும் ரசித்த விஷயம், திண்ணையில் உட்கார்ந்து தெருவில் போகும் மக்களை பார்ப்பது. அதுவும் உலகமே வேலையில் ஈடுபட்டு நான் விடுமுறையில் இருக்கும்போது. காலையில் கையில் தந்தி பேப்பரை வைத்துக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்ப்பது ஒரு சந்தோஷமான பொழுதுபோக்கு.

பெரிய ஊரில்லை. 500-600 பேர்தான். ஆனால் அந்த சிறிய ஊரில் இருக்கும் மிக சாதாரன ஆனால் ரசிக்கக்கூடிய மக்களை ஒரு 30 நிமிடம் பார்ப்பது, ஒரு வருடம் உளவியல் (Psychology) படிப்பதுமாதிரி. அந்த துளசி... அவருடைய உள்ளாடை (பட்டா பட்டி) தெரிய வண்ணமயமான கைலியை தூக்கி கட்டிக்கொண்டு, கெண்டைக்கால் தெரிய மிதிவண்டியை அவருக்கே உரித்தான தோரணையில் சற்றே சாய்ந்து ஓட்டி சென்றது எதற்கு என்று தெரியவில்லை. அவ்வளவு இளம்பெண்கள் கூட இல்லை. அந்த மிதிவண்டிக்கு அவ்வளவு ஜோடனைகள். வண்ண வண்ண ரிப்பன்கள். அப்புறம் அந்த பால்கார்... நடக்க மாட்டார். குதித்துக் குதித்துதான் செல்வார். கழுத்தில் சிறிய கயிறு. வீடு வீடாகச் சென்று மாட்டின் மடியில் சற்றே நீர் தெளித்து பால் கறந்து அடுத்த வீட்டிற்கு குதித்துக் குதித்து செல்வார். கீரைக்காரர் மிதிவண்டியில் பெரிய கூடையில் சாக்கில் கட்டி கீரைகளை கொண்டு வருவார். யாருக்கும் எந்த அவசரமும் இல்லை. அப்போது எனக்கு பங்குச் சந்தை பற்றியோ, மகள்கள் பற்றியோ கனவுகள் கூட இல்லை. ஒரே கனவு, சிவகுமார் போல நடிகனாக வேண்டும் என்று. அவரைப்போலவே ஐப்ரோ பென்சிலினால் மீசை வரைந்து கொண்டு கண்ணாடியில் பார்ப்பேன். அப்புறம் தந்தியில் மற்றும் வெள்ளிதோறும் தினமணியில் வரும் திரைச் செய்திகளயும் படங்களையும் தவறாமல் பார்ப்பேன். நண்பன் (சுழற்சி முறை நூலகம் - Circulating Library நடத்தியவன்) மூலம் பொம்மை மற்றும் பேசும் படம் முதல் ஆளாக படித்துவிடுவேன். காலத்தின் கட்டாயம், தமிழ் திரையுலகம் பிழைத்தது!

மன்னிக்கவும், ஏதோ சொல்ல வந்து எங்கேங்கோ போகிறேன். பெரிய தாத்தாவிடம் போகவேண்டும். தினமும் காலை ஏழு மணிபோல் கையில் ஒரு டிபன் டப்பா ஏந்தி என் வீட்டை கடந்து செல்வார். 6 அடி போல் உயரம். 60 வயதிருக்கும். உடம்பில் எலும்பு மற்றும் தோல்தான். தசைகள் இருப்பதற்கான அறிகுறி தெரியாது. நாங்கள் அவருக்கு வைத்த பெயர் ’மெத்தை தாத்தா’. ஏனென்றால், அவருடைய வீடு, என் வீட்டில் இருந்து இரண்டாவது வீடு, இரு மாடிகளுடன் கூடிய ஒரு மெத்தை வீடு. ஒரு விதத்தில் என் தாத்தாவுக்கு அண்ணன்.

பெரிய வீடு. கீழே மிக பெரிய வாசல். சுற்றிலும் தாழ்வாரம். மூலையில் நான்கு அறைகள். படியேறி சென்றதில்லை. ஆனால், மாடியிலும் நிறைய அறைகள். அந்த அறைகளின் ஜன்னல்கள் அழகிய வண்ண கண்ணாடி கதவுகளுடன் இருக்கும். வீட்டிற்கு பக்கத்தில் ஒரு நீண்ட இடம். எப்போதும் பூட்டியே இருக்கும். உடைந்த கதவிடுக்கில் கண்ணைப் பொருத்திப் பார்த்தால் அங்கு வண்டி இருந்ததுக்கு அடையாளமாக சில சக்கரங்களும் மரச்சட்டங்களும் இருக்கும். மாடு பார்த்தது இல்லை. ஒரு காலத்தில் குதிரை வண்டி இருந்தாக சொல்வார்கள். அந்த பெரிய வீட்டில் தாத்தா தனியாக இருந்தார். உதவிக்கு அவரை விட இன்னும் ஒடிசலான பார்வதி. அவருக்கு கஞ்சி செய்துவிட்டு, வீட்டை பெருக்கி (கீழே மட்டும்) சென்றுவிடுவார். அந்த கஞ்சி தாத்தாவுக்கு இரவு உணவு. காலை மற்றும் மதிய உணவுக்கு தாத்தா அந்த டிபன் டப்பாவில் ’இட்லிக்கார’ அம்மாவிடம் இட்லி சட்னி வாங்கிக்கொண்டு கழனிக்கு (வயல் - Fields) சென்றுவிடுவார். அதற்குத்தான் அந்த ஏழு மணி ட்ரிப். அவருக்கு பிள்ளை இருந்தார் ஆனால் நாங்கள் பார்த்ததில்லை.

Chettinad
Chettinad

தினம் இட்லி மற்றும் கஞ்சி. உடை எப்போதும் ஒரு பழைய வேஷ்டி அழுக்கு பனியன். இருளோடிய பெரிய வீடு. அவர் வேறு எங்கும் பயணம் செய்தோ அவர் வீட்டுக்கு விருந்தினர் வந்தோ நான் பார்த்தது இல்லை. செய்தி தாள் கூட என் வீட்டில் கடன் வாங்கித்தான் படிப்பார். வாங்குவது அவருக்கு பிடிக்கும். கொடுப்பது பிடிக்காது. அதனால் என்ன? நாங்களே எடுத்துக்கொள்வோம். அதாவது அவர் பெரிய தோட்டத்தில் நிறைய மாமரங்கள் இருக்கும். மதிய வேலை அவர் கழனியில் இருப்பார். விடுமுறை நாட்களில் நாங்கள் வீட்டில் இருப்போம். என்ன ஒரு சந்தர்ப்பம். மரங்களில் பழங்கள். தாத்தா கழனியில். நாங்கள் விடுமுறையில். எல்லாம் சேர்த்து பார்த்தால் புரியும். நாங்கள் அந்த மரங்களின்மேல் உட்கார்ந்து ஆற அமர்ந்து மாங்காய் சாப்பிட்டு கதை அடிப்போம். அவர் தோட்டத்துக்கு எங்கள் வீட்டு தோட்டத்தில் இருந்து ஒரு குறுக்குப் பாதையே அமைத்திருந்தோம். மாங்காய் மட்டும் இல்லை. சமயத்தில் கறிவேப்பிலை தேவைப்பட்டால், கடையை விட தாத்தா தோட்டத்தில் நன்றாகவே கிடைக்கும். நம்ம தாத்தாதானே. ஆனால் பாருங்கள், இந்த உறவுமுறைகளின் அழகு தாத்தாவுக்கு புரியாது. நாங்கள் மரத்தின் மேல் அமர்ந்து உலகின் இன்பங்களை அனுபவிக்கும் நேரங்களில், சில நாள் தாத்தா வந்து விடுவார். அவரிடமிருந்து தப்பி ஓடி ஒளிவது கை வந்த கலை. ஏதோ அரசியலமைப்பு சட்டம் எங்களுக்கு அந்த உரிமையை வழங்கியதுமாதிரி அடுத்த நாளே நாங்கள் மரத்தின் மேல்.

வருடங்கள் ஓடின. தாத்தா அப்படியே இட்லி, கஞ்சி, அழுக்கு, பார்வதி, செய்தித்தாள் கடன் என்று இருந்தார். வயது மட்டும் ஆகிக்கொண்டு இருந்தது. சில வருடங்கள் கழித்து கல்லூரி சென்றேன். ஒரு முறை விடுமுறைக்கு வந்தபோது வழக்கம்போல் வெளியில் அமர்ந்து உலகம் செல்வதை பார்த்துக்கொண்டு வாழ்க்கையைப்பற்றி வியந்துகொண்டிருந்தேன். அப்போது தாத்தாவை போல் ஆனால் இளைய உருவம் ஒன்று சென்றது. ஓடிப்போய் அம்மாவிடம் கேட்டேன், யாரம்மா அது என்று. அதுவாடா ஷங்கரி, தாத்தா போன மாதம் இறந்து போய்விட்டார். அவர் மகன் விக்ரவாண்டியிலிருந்து இங்கு வந்துவிட்டார். அவர்தான் இப்போது கழனி பார்த்துக்கொள்கிறார் என்று.

இருக்கும்போதுதான் அனுபவிக்க முடியும். அனுபவிப்பது என்றால் என்ன? இதற்கு கடவுள் கொடுத்த வரைமுறை ஏதாவது உண்டா என்ன?

என்ன சொல்வது. தாத்தா என்ன கண்டார் அப்படி வாழ்ந்து? எல்லோரும் ஓர் நாள் செல்லவேண்டும். இருக்கும்போதுதான் அனுபவிக்க முடியும். அனுபவிப்பது என்றால் என்ன? ஏதாவது கடவுள் கொடுத்த வரைமுறை உண்டா என்ன? என் அம்மாவிற்கு அனுபவிப்பதென்பது நல்ல உடை, உணவு, பயணம், இசை, சினிமா என்று. ஒரு வேலை தாத்தாவுக்கு கஞ்சி, இட்லி, அழுக்குதான் அனுபவிப்பதோ? சொல்லப்போனால், எவ்வளோ விதமான மக்கள், வித விதமான எண்ணங்கள், வித்தியசமான வாழ்க்கைகள் இந்த உலகில்.

என் இந்த குறுகிய வாழ்க்கையில் எவ்வளவு பேரைப் பார்த்திருக்கிறேன். எத்தனை பேர் இந்த உலகை விட்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். எவ்வளவோ புதிய உயிர்கள் இந்த உலகில் வருவதையும் பார்த்திருக்கிறேன். நானும் ஒரு விருந்தாளிதான். என்று செல்வேன் என்று தெரியவில்லை. எல்லோரையும்போல் நானும் ஏதோதோ செய்துகொண்டிருக்கிறேன். சம்பாதிக்கிறேன். செலவழிக்கிறேன். சாப்பிடுகிறேன். பயணிக்கிறேன். எழுதுகிறேன். காதலிக்கிறேன். கோபப்படுகிறேன். ஒரு நாள் எதுவுமே இல்லாமல் அந்த எதுவுமே இல்லை என்பதை உணரக்கூட முடியாமல், என்ன ஒரு மாயையான பயணம். இதெல்லாம் நினைத்தால், எல்லாம் எதற்கு என்று ஒரு பெரிய கேள்வி வரும். அதற்கெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் ஒரே பதில், நினைக்காதே. போகிற போக்கில் செல். அனுபவி, உன் வரையறைப்படி. முடிந்தவரை நல்லதை செய். மற்றவர்களின் துயரங்களை புரிந்துகொள். மற்றவர்க்கு உதவு. இந்த அனுபவிப்பது என்பது கூட என் அம்மா ஓரளவுக்கு எனக்கு சொல்லிக்கொடுத்ததுதான்.

Chettinad
Chettinad

இந்தப் பின்புலத்தில், நான் சிலரை பார்க்கும்போது அவர்களின் சித்தாந்தம் புரிந்துகொள்ள முடியாது. அந்த பெரிய தாத்தா அப்படிப்பட்ட மனிதர். இதையெல்லாம் பார்த்து பகுத்தறிந்து புரிந்துகொள்வது என்பது என் சிறிய அறிவுக்கு இந்த ஜென்மத்தில் கடினம். அதெல்லாம் குருஜிக்களுக்கும் ஆனந்தாக்களுக்கும் விட்டுவிட்டு என் பூலோக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு செல்லவேண்டும். பார்ப்போம் அடுத்த வாரம்!

- சங்கர் வெங்கடேசன்

(shankarven@gmail.com)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு