
தமிழ்ப்பிரபா, படம்: தே.சிலம்பரசன்
``வெயில்ல தெருத்தெருவா அலைஞ்சு வியாபாரம் பண்றவனுக்குத்தான் நிழலோட அருமை தெரியும்” என்று சொல்லும் ஏழுமலை, கடந்த 24 வருடங்களாக வீதிவீதியாக ஜவுளி வியாபாரம் செய்துவருபவர். விழுப்புரம் பையூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், விழுப்புரத்தையொட்டியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்திருக்கிறார். அதற்கு முக்கியக் காரணம், நிழலைத் தேடி அவர் அலைந்ததைப்போல மற்றவர்கள் அலையக் கூடாது என்பதுதான்.
``ஒரு மனுஷன் நிழலைத் தேடி அலையறதைவிட வேற கொடுமை இல்லைங்க. ஆத்தோரம், ஏரிக்கரைப் பக்கம், வெயிலுக்கு ஒதுங்க முடியாத இடங்கள்னு பல பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டுட்டு வரேன். 12 வருஷங்களா இதைச் செஞ்சுட்டு வரேன். தோராயமா ஆயிரத்துக்கு மேல இருக்கும்” என சர்வசாதாரணமாகச் சொல்கிறார் ஏழுமலை.
மரங்களை நடுவது மட்டுமன்றி அவற்றுக்கு முள்வேலி அமைப்பது, இரும்புக்கூண்டுக்குள் அமைத்துப் பத்திரப்படுத்துவது, வாடிய செடிகளுக்கு நீர் ஊற்றுவது என வண்டியில் ஜவுளி வியாபாரம் செய்தபடியே இதையும் செய்கிறார். இத்துடன், கடந்த ஐந்து வருடங்களாகப் பனை விதைகளை நிலங்களில் பதித்துவருகிறார் ஏழுமலை. அதன் சாட்சியாக, இன்று பையூர் சார்ந்த கிராமங்களில் இவர் விதைத்த பனைமரங்கள் நெடுமரங்களாக வளர்ந்திருக்கின்றன.

``பொதுவா பனைமரங்களுக்குப் பராமரிப்பு தேவையில்லை. வேர் பிடிச்சிருச்சுன்னா அதுவா வளர்ந்து நிக்கும். அது கொடுக்கிற பலனை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனா, யாரும் நடுறதுக்குத் தயாரா இல்லை. நூறு நாள் வேலைத்திட்டத்துல, வறண்ட நிலங்கள்ல பனை விதைகளை விதைக்கிறதையும் சேர்க்கணும்னு விழுப்புரம் கலெக்டர்கிட்டகூட மனு கொடுத்துட்டேன். `இது எங்க திட்டத்துல வராது’னு பதில் அனுப்பிட்டாங்க” எனச் சொல்லும்போது, குரல் தேய்கிறது ஏழுமலைக்கு.
``ஜேசிபி வாடகைக்கு எடுத்து சின்னச் சின்ன குழிங்க வெட்டி அரசு, ஆலம், புளி, இலுப்பைக் கன்றுகளை நடுற நேரத்துல மட்டும் கொஞ்சம் பணம் இடிக்கும்” என்பவருக்குக் கிடைப்பதோ சொற்ப வருமானம்தான். அதில் மரக்கன்றுகள் மற்றும் விதைகளுக்கு, அவற்றின் பராமரிப்புக்கு எனக் குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் ஒதுக்கிவிடுகிறார். வண்டியில் துணி எடுத்துக் கொண்டு போகும்போது கஸ்டமர்களிடம் மர வளர்ப்பின் அவசியத்தைச் சொல்வதுடன், யார் யாருக்கு மரம் வளர்க்க விருப்பம் இருக்கிறதோ அவர்கள் பெயர், அலைபேசி எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டு, மறுதினமே மரக்கன்றுகளுடன் அவர்கள் வீடு தேடிச் சென்று கொடுத்துவிட்டு வருகிறார் ஏழுமலை.
``தெருத்தெருவா துணியைச் சுமந்து இத்தனை வருஷங்களா ஜவுளி வியாபாரத்தைப் பார்த்ததுக்கு, சின்னதா ஊருக்குள்ள கடை போட்டிருந்தா கொஞ்சம் காசு பார்த்திருக்கலாம். ஆனா, மனசு கேட்கமாட்டேங்குது. நாம வெச்ச கன்னு மரமாகி, கிளை பரப்பி, நாலு பேர் அந்த நிழல்ல நிக்குறதைப் பார்க்கும்போது வர்ற சந்தோஷத்தை, வேற எப்படியும் சம்பாதிக்க முடியாது”
ஆமோதித்து ஆசீர்வதிக்கிறது அவர் வளர்த்த மரம்!